02 அன்னை மடி

கதிரவனை வரவேற்று

கானம் பாடும்

வானம் பாடிகளின் சங்கீதம்

மனதில் மலர்வித்த

மகிழ்ச்சிப் பரவசம்

 

இளைப்பாறிய இமையிதழ்கள்

விழிமலரைப் பிரசவிக்க

திண்டல் மலைக் கோபுரத்தின்

தெளிவான பிம்பத்தால்

உள்ளத்தில் ஊற்றெடுத்த

உற்சாகக் குமிழ்கள்

 

கார்மேகங்களின்

கண்ணீர் துளிகள்

மேனியை மென்மையாக 

முத்தமிட்டப்போது

மனதில் தோன்றிய

மட்டற்ற மகிழ்ச்சி

 

பெளர்ணமி இரவில்

தோகையாய் விரிந்த

தென்னங் குருத்தோலை களிடையே

பன்னிசைத்துப் பரவசப்படுத்திய

தென்றலின் தீஞ்சுவை

 

உயர்ந்த சிகரத்தின்

உச்சியிலிருந் தோடிவந்து

உடலைத் தழுவி உற்சாகமூட்டும்

அருவியின் அரவணைப்பில்

உருவான இனபம்

 

துள்ளி விளையாடிய

பள்ளிப் பருவத்தில்

சல சலத்த நீரோடையில்

சகத் தோழர்களோடு

நீச்சலடித்தப்போது

நீடித்த இன்பம்

 

மாலை முரசில்

முதல் கவிதை

மலர்ந்து மணம் பரப்பியபோது

ஆழ்மனதில் நுழைந்த

அடிக்கரும்பின் இனிமை

 

இவையனைத்தையும்

ஒருங்கே உணர்ந்தேன்

என் அன்னை மடியில்

சிரம் வைத்து

வான் வெளியில் சிதறிக்கிடந்த

விண்மீன்களை

விரல் விட்டு எண்ணும்போது !!

2 Comments

  1. chinnasami said,

    Nice Govind keep it up rasischu ezhluthierukeenga nice

  2. JayaPrakash.R said,

    Really Great Govind. Nice thoughts….
    “AMMA” the word in tamil is three letter which is greatest kavithai in world…
    Keep it up
    Govind.

Post a Comment